கோப்பாய் சரவணபவானந்த வித்தியாசாலை.



1926 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கோப்பாய் வடக்கு கழட்டிக் கந்தசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் சித்திரா பூரணையையடுத்து, கந்தபுராணப் படிப்பு நடைபெறும். கோப்பாய் வடக்கு கந்தர் சின்னத்தம்பி, சின்னத்தம்பி மார்க்கண்டு என்போர் புராணம் படிப்பதும் இவ்வூர் பிரான்பத்தை ஆயுள் வேத வைத்தியர்கள் சி.மயில்வாகனம், திரு.கந்தையா என்போர் பயன் சொல்லுவதும் வழக்கமாயிருந்தது.


கோப்பாய் வடக்கு அப்பிளானை ஒழுங்கை முகப்பில் நின்ற பாரிய வேப்ப மரத்தின் கீழ் அயலேயுள்ள விவசாயப் பெருமக்கள் ஓய்வு நேரங்களில் ஒன்று கூடி கிராம, வெளிநாட்டுப் புதினங்களையும், புராண இதிகாசக் கதைகளையும் தெரிந்தவர் வாயிலாகக் கேட்டுக் கொண்டிருப்பது வழக்கம்.

பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் கோப்பாய் சி.எம்.எஸ்.பெண்கள் பாடசாலையதீபர் வெள்ளைக்கார அம்மாவும் ஆசிரியர்களும் அயலே உள்ள சென்ற்மேரிஸ் தேவாலய குருவும், உள்ளிட்ட கூட்டத்தார் மேற்குறித்த வேம்படியில் தேவ ஆராதனைக் கூட்டங்கள் வைப்பதும், அயலேயுள்ள சிறுவர்கள் வயோதிபர்கள் கூடி நின்று கேட்ப்பதும் நடந்து வந்தது.

கோப்பாயில் திண்ணைப் பாடசாலையமைத்து நிகண்டு, புராணம், இதிகாசம் முதலியன கற்ப்பித்து வந்த முருகேசு உபாத்தியார் மகன் நாகலிங்கம் அவர்கள் உரும்பிராய் ஆங்கில பாடசாலையில் ஆங்கில ஆசிரியார்கவிருந்தார். பகிரங்கப் பரீட்சையை அண்டிய நாட்க்களிலும் விடுதலை நாட்க்களிலும் மாலை வேலைகளிலும் இலவச வகுப்புக்கள் வைத்து பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தஞ் செய்வது அக்கால நலன் விரும்பி ஆசிரியர்களது வழக்கம்.


அன்றொரு நாள் வேப்ப மரத்தடியில் பிரசங்கம் முடிந்து பாதிரிமார்கள் சென்றதும் அவ்விடத்தில் கூடியிருந்த முதியவர்கள் கலந்துரையாடலின் பொது கோப்பாய் வடக்கில் எமது சிறுவர்கள் சைவச் சூழலில் கல்வி பெறுவதற்கு ஓர் சைவப் பாடசாலை வேண்டும்; என்பது அன்றைய பிரதான பேச்சாயிருந்தும், குறித்த வேம்படியையடுத்த வீட்டுக்காரனும் கந்தபுராணப் படிப்புக்காரனுமாகிய சின்னத்தம்பி மார்க்கண்டு முதலிய பெரியவர்கள் இது விசயமாய் தீவிரமாய் ஆலோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் மாலை நேர இலவச வகுப்பை முடித்துக் கொண்டு வந்த நாகலிங்க உபாத்தியாயரை இடை மறித்து இருத்தி "தம்பி எங்கட்கு ஓர் சைவப் பாடசாலை வேண்டும்" என்று சின்னத்தம்பி மார்க்கண்டு, வீரபாகு கந்தையா, கணபதியார் கந்தையா, முதலிய அங்கிருந்த முதியவர்கள் அவருடன் ஆலோசித்தார்கள்.
மேற்கொண்டு நாகலிங்க உபாத்தியாயருடைய தீவிர முயற்ச்சியால் கோப்பாய் வடக்கு சித்திரவேலாயுத சுவாமி கோயில் முன்வீதியில் 1926 அக்சயவருடம் சித்திராப் பூரணையையடுத்த ஒரு வெள்ளிக்கிழமை மாலை எழு மணியளவில் சைவப் பாடசாலையமைக்கும் நோக்கமானதொரு பகிரங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, அப்போது கிராமத்திலுள்ள சைவப்பெரியார்கள் அனைவரும் சமூகமளித்திருந்தனர். அங்கே சைவ வித்தியா விருத்திச் சங்கச் செயலாளரும் கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவருமாகிய ஸ்ரீமான் க.இராசரத்தினம், வட்டுக்கோட்டை எம்.எஸ்.இராசரத்தினம் நியாயவாதிகள் இருவரும் விசேட அழைப்பின் பேரில் சமூகமளித்திருந்தனர். ஆலய பூசை முடிந்ததும் பிரம்மஸ்ரீ சபாரத்தின்க் குருக்கள் அவர்கள் பிரசாதம் வழங்கி அனைவரையும் ஆசிர்வதித்தார். எமதூரில் ஓர் சைவப் பாடசாலை ஒன்று இல்லாத குறைபாட்டால் நமது சைவச் சிறார்கள் படும் இன்னல்களை விரிவாக மு.நாகலிங்கம் ஆசிரியர் எடுத்துக் கூறினார் பல முதியவர்களும் தொடர்ந்து இது விசயமாய்த் தமது ஆவலைத் தெருவித்து சமூகமளித்திருக்கும் இரு பெரியார்களையும் மேற்கொண்டு இது விசயமாய் ஆவன செய்து தருமாறும் வேண்டினர்.


பிரதம விருந்தினர்கள் பாடசாலை ஆரம்பிப்பதற்கான வழிவகைகளைக் கூறிய பின், காணி உதவி கட்டிடமும் தந்தால் சைவ வித்தியா விருத்திச் சங்கம் ஆசிரியர்களை நியமித்து மேற்கொண்டு வேண்டியன செய்து தரும்; என வாக்களித்தனர். அப்போது அவ்விடத்தில் சமுகமாயிருந்த திருவாளர்கள் சி.மார்கண்டு, க.முத்தையா, வீ.கந்தையா, க.இளையதம்பி, மு.வைரமுத்து, பூ.சின்னப்பா, இ.இளையதம்பி, சி.பொன்னையா, சி.முருகேசு, வீ.சி.கந்தையா என்போர் ஊர் மக்கள் உதவியுடன் வேண்டியன செய்து தருவதாக வாக்களித்தனர்.திருவாளர் முருகர் கந்தரும், சி.பொன்னையா, சி.மார்க்கண்டு சகோதரர்கள் இருவரும் தங்கட்க்குச் சொந்தமான மயிலோடை எனும் காணியில் மூன்று பரப்பு நன்கொடையாகத் தருவதாக வாக்களித்தனர். பணஞ் சேர்த்தும் பணிகளைத் தறித்தும் 1500 சதுர அடி கொண்ட நிலையான கட்டிடம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.


உரிய கட்டிடம் பூர்த்தியாகும் வரையும் காத்திராமல் உடனடியாகத் தற்க்காலிகமாக ஓர் கட்டிடத்தில் ஆரம்பிக்கலமா? என்று கலந்தாலோசிக்கப்பட்ட பொது மு நாகலிங்கம் அவர்கள் தமது தலைவாசல் கட்டிடத்தையும், தற்க்காலிக கொட்டிலமைக்க அதனோடு சேர்ந்த முன் காணியையும் உடன் தருவதாக வாக்களித்தார். ஊரவர்களின் உற்சாகம் கரைபுரண்டோடியது.




வரலாறு தொடர்கிறது.. மிகுதி இன்னும் சில நாட்களில் எழுதி பூர்த்தியாக்கப்படும்.

எமது கோப்பாய்க் கிராமத்தில் நடைபெறும் செய்திகள் ,காலாச்சார நிகழ்வுகள் ,தேவாலய ,கோவில் திருவிழாக்கள்,பாடசாலை நிகழ்வுகள் , வாழ்த்துச் செய்திகள் அல்லது மறைவுச் செய்திகள் மற்றும் அனைத்து நிகழ்வு ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ அல்லது சிறு குறிப்பாகவோ தந்துதவினால் அவற்றை நாம் தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம் தொடர்பு கொள்ள கிழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Hostgator Coupon Code